தீபாவளி — மீண்டும் வருமா???
17 வருஷம் ஓடியே போச்சு தாய்நாடு விட்டு அமெரிக்கா வந்து. வந்த புதிதில் அனைத்தும் அன்னியம், தொலைத்தது மிக அதிகம், தனிமை கற்றுக்கொடுத்தது ஏராளம்.
அம்மா, அப்பா, தம்பிகள், நண்பர்கள், என் மொழி, என் கலாச்சாரம், என் நாடு அனைத்தையும் தொலைத்ததாய் எண்ணி வருந்திய தருணங்கள் மிக அதிகம். நான் தொலைத்ததையும் அவற்றிண் அருமையும் பெருமையும் உணர எனக்கு கிடைத்த ஒரு அரிதான வாய்ப்பாக மாறியது நான் தனித்து வாழ்ந்த தருணங்கள்.
மெல்ல மெல்ல அனைத்தையும் வாழ்க்கையில் இணைத்து இன்று முழுமை அடைந்திருத்தாலும், இன்றும் ஒரு சில நினைவுகள் தருணங்கள் மீண்டும் வராதா என மணம் ஏங்கி தவித்துக்கொண்டு தான் உள்ளது….
இன்னும் இரு தினங்களில் தீபாவளி பண்டிகை. என்னதான் நண்பர்களுடன் கூடி “பாத்லக்” (potluck) என்ற பெயரில் விதவிதமான உணவு உண்டு, கேலி கலாட்டா கும்மாளம் என்று பார்ட்டி செய்தாலும் நமது சிறு வயது தீபாவளி கொண்டாட்டமும் நாட்களும் மீண்டு வருமா??? ஈடுதானாகுமா?
எப்படா தீபாவளி வரும் என காத்துக்கிடந்ததும், கடவுளே இந்த தீபாவளிக்கு மழை வரக்கூடாது என்று வேண்டியதும் நினைவிற்கு வருகிறது.
தீபாவளி வருவதற்கு ஒரு மாதம் முன்பே புது துணி எடுத்து, டெய்லர் கிட்ட கொடுத்து — “அண்ணா எப்படியாவது இரண்டு வாரத்துக்குள்ள தச்சி கொதுத்துடுக” என அப்பா கேட்ததும், எப்போ தைத்து முடிந்து புது ட்ரெஸ் வரும் என காத்து கிடந்த காலம் எத்தனை சுகமானது…
தீபாவளிக்கு இரு வாரம் முன்பு தொடங்கி முந்திய வருஷத்துல மீந்த பட்டாச தினமும் காய வைக்க சொல்லி அம்மா கிட்ட சொன்னதும், அத ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் செக் பண்ணதும் சொல்ல முடியா சந்தோஷங்கள்…
இந்த வருஷம் அப்பா எப்ப பட்டாசு வாங்க போறாரு என எதிர்ப்பார்த்திருந்தும், என்ன வாங்கலாம் என அப்பா கேட்டதும் — “அப்பா எனக்கு ஓல பட்டாசு, லக்ஷ்மி வெடி, ஆட்டோம் பாம், குருவி வெடி, 1000 வாலா, பென்சில், மத்தாப்பு, பூசுவானம், ராகெட், சங்குச்சக்கிரம்” என நாங்கள் போட்டியிட்டு அடுக்கி கொண்டே போனதும், அப்பா பட்டாசு வாங்கி வந்தபின் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து ரசித்தது இன்றும் புத்துணர்ச்சி கூட்டுகிறது….
இரண்டு நாள் முன்பே அம்மா தீபாவளி பலகாரம் செய்ய தொடங்க, ஸ்கூல் முடித்து வீடு வந்ததும் அம்மா இன்னைக்கு என்ன செஞ்சு வெச்சிறுக்காங்க என சமையல் அறை முழுக்க தேடியும் அம்மா ஒளித்து வைத்த சம்புடங்கள் கண்ணில் தென்ப்படாததால், “அம்மா ப்லீஸ் மா, என்ன பண்ணீங்க சொல்லுங்கமா” என்று கெஞ்சியதும், அம்மா – “நிஜமா தான் சொல்றேன் நான் ஒண்ணும் பண்ணல” என கூறி, நாம் முகம் வாடும் முன்பு அந்த மறைத்து வைத்த பலகாரத்த எடுத்து கொடுக்க, எத்தனை சந்தோஷம்… இந்த உலகமே நம் காலடியில் என்ற இணையில்லா பூரிப்பு….
தீபாவளி முன் இரவு அப்பா ஒரு செட் பட்டாசு பகிர்ந்து கொடுக்க அதை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் கூடி எப்போடா 12 மணி ஆகும் என எல்லாரும் காத்திருந்து, 12 மணி அடித்ததும் டான் என்று அனைவரும் சேர்ந்து பட்டாசு வெடித்து வாழ்த்துக்கள் பகிர்ந்து காலையில் பார்க்கலாம் என்று சொல்லி கண் அயர மூன்று மணி நேரத்தில் எழுப்புவாள் அம்மா.
விடியற்காலை 3:30 மணிக்கு அம்மா எங்களை எழுப்பி வரிசையாக உட்கார வைத்து, மிளகு – அரிசி போட்டு காய்த்த நல்லெண்னை சுட சுட தலையில் தேய்க்க சுகமோ சுகம்.
அப்பா பாய்லெரில் தண்ணி சுட வைக்க, அம்மா அதனுடன் “யுகலிப்டஸ்” இலை சேர்த்து சீயக்காய் கொண்டு தலை கசக்கி விட, அனைத்து உடல் உபாதையும் பறந்தே போகும்.
அம்மா பூஜைக்கு தயார் ஆகும் நேரத்தில், அப்பா மீதம் உள்ள பட்டாசை எங்களுக்கு சமமாக பிரித்து கொடுக்க, அங்கு நாங்கள் அனைவரும் “க்வாலிடீ கன்ற்றோள்ளராக” (quality controller) மாறி விடுவோம்.
5 மணிக்கெல்லாம் வீட்டில் பூஜை முடித்து, குடும்பத்துடன் கோவில் சென்று திரும்புவதும், அன்று மட்டும் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என பாகுப்பாடு இன்றி அனைவருக்கும் வாழ்த்து சொல்வதிலும் எத்தனை மகிழ்ச்சி.
மீண்டும் பட்டாசு வெடித்து, அக்கம் பக்கம் வீட்டாருடன் பலகாரம் பகிர்ந்து, யார் வீட்டு முன்பு அதிக பட்டாசு குப்பை என போட்டி வைத்து மகிழ்ந்த நாட்கள் இனி மீண்டும் வருமா???
ஏனோ மனம் ஏங்கி தவிக்கிறது அந்த தீபாவளி என்றேணும் மீண்டும் வருமா என்று!!!!